‘இம்மார்டல்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

அழகான பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு, ஒரு இளைஞனை எதிர்பாராத ஆபத்தில் சிக்க வைக்கிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து அவனால் மீள முடிந்ததா என்பதையே ஹாரர் திரில்லர் பாணியில் சொல்லும் படமாக வெளியாகியுள்ளது ‘இம்மார்டல்’. ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ள இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மகி என்ற கதாபாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறன், கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சென்னையில் உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் பணியாற்றி வரும் மகிக்கு வீட்டு உரிமையாளரால் புதிய வீட்டை தேடும் சூழல் உருவாகிறது. அப்போது சிந்துவை சந்திக்கும் அவர், வெளியில் இருந்து பார்க்கும்போது சொகுசான நட்சத்திர விடுதி போல் காட்சியளிக்கும் அவரது வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கிறார். சிந்துவின் அழகில் ஈர்க்கப்பட்ட மகி, அங்கு தங்குவதால் தனக்கு என்ன பிரச்சினை வரப்போகிறது என்பதை ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. வீட்டில் அடுத்தடுத்து நடைபெறும் சில விசித்திரமான சம்பவங்கள் மகியின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. முதலில் புரியாத புதிராக இருக்கும் விஷயங்கள், பின்னர் அவனை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. ஒரு கட்டத்தில் தான் சிந்துவால் உருவாக்கப்பட்ட மாய உலகத்திற்குள் சிக்கியிருப்பதை மகி உணர்கிறார். அந்த இடத்திலிருந்து அவனால் வெளியே வர முடிந்ததா என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

மகியாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், பெண்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இளைஞராக கதைக்கு தேவையான அளவில் நடித்திருக்கிறார். சிந்துவின் மீது ஈர்ப்பு ஏற்படும் காட்சிகளில் தொடங்கி, அதே பெண்ணால் ஆபத்து இருப்பதை உணர்ந்து பயந்து விலகும் தருணங்கள் வரை அவரது நடிப்பு கதையின் போக்குடன் பொருந்துகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் அச்சமான சூழல்களில் அவரது பதற்றம் கதைக்கு ஓரளவு வலு சேர்க்கிறது.

ஆனால் படத்தில் அதிக கவனம் ஈர்ப்பது கயாது லோஹரின் நடிப்புதான். அழகுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை தனது பார்வை மற்றும் உடல்மொழி மூலமாகவே வெளிப்படுத்துகிறார். தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ள நிலையில், கவர்ச்சியான தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் வில்லத்தனமான சாயல் கொண்ட நடிப்பிலும் தனித்துத் தெரிகிறார். முதல் பாதியில் ஈர்ப்பையும், பின்னர் பயத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் திகில் காட்சிகளுக்கு முக்கிய பலமாக அமைவது சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை. குறிப்பாக அச்சத்தை உருவாக்க வேண்டிய இடங்களில் இசை காட்சிகளுடன் நன்றாக இணைகிறது. காதல் மற்றும் கவர்ச்சி நிறைந்த காட்சிகளிலும் அதற்கேற்ற இசையை அமைத்துள்ளதால், ஒட்டுமொத்தமாக பின்னணி இசை படத்தின் சூழலை தாங்கிச் செல்கிறது.

பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டைச் சுற்றியே நகர்வதால், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் காட்சிகளை பதிவு செய்வது ஒளிப்பதிவாளருக்கு சவாலான பணியாக இருந்திருக்கிறது. அதற்கேற்ப வீட்டின் வெவ்வேறு பகுதிகளை பயன்படுத்தி காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். வெளிப்புறக் காட்சிகள் வரும் இடங்களிலும் தனித்துவமான காட்சியமைப்பை கேமரா பதிவு செய்கிறது. கதை செல்லும் விதத்தில் சில குறைகள் இருந்தாலும், ஹாரர் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படங்களை விரும்புபவர்களுக்கு ‘இம்மார்டல்’ ஓரளவு திருப்தி தரக்கூடிய படமாக அமைந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திகில் காட்சிகளும் கயாது லோஹரின் கதாபாத்திரமும் படத்தின் முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.

Add a Comment

Leave a Reply