ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவில்லை. நான்கு வார ஓடிடி வெளியீட்டு இடைவெளி தொடர்பான விவகாரத்தால் அங்குள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் படத்தைத் திரையிடவில்லை எனக் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் பல்வேறு வகையான திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. வட இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகியிருந்தால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’, ‘ஜெயிலர்’, ‘2.0’, ‘கபாலி’ ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் ரூ.100 கோடியைக் கடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் ‘ஜெயிலர் 2’ படமும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
