திகில் படங்களுக்கான வழக்கமான பேய், பங்களா, பழிவாங்கல் எனும் கதைக்களத்தைத் தாண்டி, காலம், நினைவுகள், அறிவியல் மற்றும் மனிதர்களின் பயம் ஆகியவற்றை இணைத்து உருவாகி வருகிறது ‘நோவா’. மைலோ இயக்கும் இப்படத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் சிறப்பம்சமாக ரைசா வில்சனின் கதாபாத்திரத்திற்கு ஒரு வசனம் கூட இடம்பெறவில்லை. எந்தவொரு வார்த்தையும் பேசாமல், பார்வை மற்றும் உடல்மொழி மூலமாகவே தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரைசாவை ரசிகர்கள் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘நோவா’வை வெறும் திகில் திரைப்படமாக மட்டும் உருவாக்கவில்லை என்றும், பயத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய மர்மத்தை சொல்லும் முயற்சியாக இப்படம் இருக்கும் என்றும் மைலோ குறிப்பிட்டுள்ளார். படம் முழுவதும் பார்வையாளர்களிடம் கேள்விகளை எழுப்பும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியில் பல்வேறு கேள்விகளுடன் ரசிகர்கள் வெளியே வர வேண்டும் என்பதே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் ‘ஃபைனலி’ சுவாதிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரைசாவின் மாறுபட்ட நடிப்பும், வழக்கமான திகில் பாணியில் இருந்து விலகிய கதைக்களமும் ‘நோவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
