போதை என்றால் மது மற்றும் போதைப்பொருட்கள் மட்டுமே அல்ல; அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகி வருகிறோம் என்ற கருத்தை முன்வைக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம். அமெரிக்காவில் பணியாற்றி வரும் டி.ஆண்டனி இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வங்காள நடிகை மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்திற்கான பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதி இசையமைத்துள்ளார். திரைப்பட விழாவில் பேசிய அவர், சமூகத்தில் போதை எந்தெந்த வடிவங்களில் மனிதர்களை பாதிக்கிறது என்பதை இப்படம் பேசுவதாக குறிப்பிட்டார். செல்போனில் தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது கூட ஒரு விதமான போதையாக இருக்கலாம் என்றும், நம்மை சுற்றிலும் நமக்குத் தெரியாத பலவிதமான போதைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்புறத்தில் இருக்கும் போதை மட்டுமல்லாமல், மனிதர்களின் ஆழ்மனதில் உருவாகும் பழக்கங்களும் அவர்களை மயக்கத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்பதை படம் சுட்டிக்காட்டுவதாக கார்த்திக் நேத்தா கூறியுள்ளார். மேலும், போதை குறித்த தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தனது வாழ்க்கையில் 22 ஆண்டுகள் போதையுடன் போராடியதாகவும், அந்த அனுபவத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் போதை குறித்து ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்பு மட்டுமே மனிதர்கள் தங்களது வாழ்க்கைப் பாதையைப் பற்றி சிந்திக்கச் செய்யும் சக்தி எனக் குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார். ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
