பாலிவுட்டில் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் அக்ஷய் குமார், பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ‘ஓஎம்ஜி 2’, ‘சர்பிரா’, ‘கேல் கேல் மெய்ன்’, ‘சிங்கம் அகெய்ன்’ உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
இதனிடையே, மற்றொரு முன்னணி பாலிவுட் நடிகரான சயீப் அலிகானும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்ட இவர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘தேவரா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அக்ஷய் குமாருடன் இணைந்து ‘ஹைவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘ஒப்பம்’ திரைப்படத்தை மையமாகக் கொண்டு ‘ஹைவான்’ உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
—
