‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள புதிய படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெய்லர் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகளைப் பார்க்கும்போது, இது முழுக்க ஆக்ஷன் மையப்படுத்தப்பட்ட படம் அல்ல என்பது தெளிவாகிறது. காதல், குடும்ப உறவுகள், உணர்ச்சி பிணைப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குடும்பத் திரைப்படமாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உருவாகியுள்ளது.
