உலகம் முழுவதும் தன்னைப் பற்றிய நினைவுகளை அழித்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கும் பீட்டர் பார்க்கர், யாருக்கும் தெரியாத ஒரு சாதாரண மனிதராக வாழ முயற்சிக்கிறார். ஆனால், தனது நண்பர்களும் காதலியான எம்.ஜே-யும் தன்னை மறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், குறைந்தது அவளுக்காவது உண்மையை நினைவூட்ட வேண்டும் என்ற ஏக்கத்துடன் போராடுகிறார். தனது பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பீட்டரின் மனநிலை படத்தின் ஆரம்பத்திலேயே வலுவாக காட்டப்படுகிறது.
இதற்கிடையில், டேமஜ் கண்ட்ரோல் மையத்தை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. மர்மமான சக்தி கொண்ட இளம் பெண் ஒருவர் மக்களை வசியப்படுத்தி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தப்பித்துச் செல்லும் திறனுடன் அங்கு புகுந்து VMAX எனப்படும் முக்கிய பொருளை கைப்பற்ற முயற்சிக்கிறார். அதே சமயம் எம்.ஜே-க்கு புதிய காதலன் இருப்பதை அறியும் பீட்டர் மனஅழுத்தத்திலும் கோபத்திலும் ஆழ்கிறார். அதன் விளைவாக அவரது உடலிலும் சக்திகளிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தும் அந்த மர்ம பெண், எம்.ஜே-யை மையமாகக் கொண்டு பீட்டரை தனது வலையில் சிக்கவைக்கிறார். இறுதியில் VMAX-ஐ பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், தன்னை யார் என்பதை எம்.ஜே மற்றும் தனது நண்பனிடம் வெளிப்படுத்துகிறாரா என்பதிலுமே மீதிக் கதை நகர்கிறது.
பீட்டர் பார்க்கராக டாம் ஹாலண்ட் மீண்டும் தனது இயல்பான, துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக எம்.ஜே-க்கு தனது காதலை உணர்த்த முயற்சிக்கும் காட்சிகள், அவளை காப்பாற்ற எந்த அளவுக்கும் செல்வேன் என்ற உறுதியுடன் அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளன. வில்லி கதாபாத்திரத்தில் வரும் சாடி சிங்கின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. அவரது உடல் மொழி, பார்வை, வசியப்படுத்தும் காட்சிகள் ஆகியவை பலருக்கும் தமிழ் படமான ‘7ஆம் அறிவு’வில் இடம்பெற்ற டாங்லீ கதாபாத்திரத்தை நினைவூட்டும் வகையில் இருக்கின்றன.
காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜீன் என்ற கதாபாத்திரம் ஏற்கனவே பரிச்சயமானதாக இருந்தாலும், இந்திய ரசிகர்களிடம் அது வேறு ஒரு நினைவினை கிளப்புவது சுவாரஸ்யமான அம்சமாகும். ஆனால், ஒரு ஸ்பைடர்மேன் படத்திலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கு, அதிரடி மற்றும் உணர்ச்சி என்ற மூன்றும் தான். அந்த மூன்றையும் படம் முழுமையாக வழங்குகிறது. குறிப்பாக பீட்டர் மற்றும் எம்.ஜே இடையிலான காதல் மற்றும் பிரிவின் வலி கலந்த காட்சிகள் பல இடங்களில் மனதை தொடும் தருணங்களாக அமைந்துள்ளன.
ஜீன் மக்களை வசியப்படுத்தும் காட்சிகள், ஹல்க் உடன் இடம்பெறும் மோதல், கிளைமேக்ஸில் வரும் நிஞ்சா பாணி சண்டை என ஸ்டண்ட் அமைப்புகள் படத்தின் முக்கிய பலமாக இருக்கின்றன. இறுதிக்கட்ட காட்சிகள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் அதிகமான தொழில்நுட்ப விளக்கங்கள் சாதாரண ரசிகர்களுக்கு சற்றுக் குழப்பமாக தோன்றலாம். அந்த வசனங்களை இன்னும் எளிமையாக வடிவமைத்திருக்கலாம். தொழில்நுட்ப ரீதியாக இசை, ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் மற்றும் சிஜி வேலைகள் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளன.
