அரிய வகை மரம் ஒன்றை புகைப்படம் எடுக்க மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குள் செல்லும் புகைப்படக் கலைஞர் அஷ்ரப், வழி தவறி யாரும் திரும்பி வராத ஆபத்தான காட்டுப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து வெளியேற போராடும் அவர், இயற்கையின் சீற்றம், மர்மமான சம்பவங்கள் மற்றும் உளவியல் ரீதியான பல சோதனைகளை எதிர்கொள்கிறார். அவர் உயிருடன் மீண்டாரா, தேடிய மரத்தை கண்டுபிடித்தாரா, காட்டின் மர்மங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதையே படம் சஸ்பென்ஸ் கலந்த முறையில் சொல்லுகிறது.
கதை எழுதி இயக்கியதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ள அஷ்ரப், ஒரே மனிதனை மையமாக வைத்து தனிமையான உயிர் பிழைப்பு போராட்டத்தை திரையில் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். முதல் பாதியில் அவரது நடிப்பு சில இடங்களில் செயற்கையாக தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதையின் தீவிரத்தோடு இணைந்து உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகியாக நடித்த ஜனனி சமாதானம் குறைந்த காட்சிகளில் வந்தாலும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். கருணாகரன் நண்பர் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து நினைவில் நிற்கிறார். உறியடி சிவா தனது வேடத்தை சரியாக கையாள, ஆடுகளம் நரேன் அனுபவமான நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத் காட்டின் இயற்கை அழகை ரசிக்கும்படி பதிவு செய்துள்ளார். ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சி மற்றும் பதட்டத்தை உயர்த்தும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.சில காட்சிகள் தேவையில்லாமல் நீளுவதால் படத்தின் வேகம் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் அம்மா-மகன் பாசம், தனிமையின் உளவியல் தாக்கம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பது இந்தப் படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.
