முன்னாள் காவலரான ‘அரசு’ என்பவரின் தலைமையிலான கும்பலில் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்) முக்கிய உறுப்பினராக இருக்கிறார். அரசாங்க துப்பாக்கிகளை கொள்ளையடித்த வழக்கில் போலீசார் இந்தக் கும்பலைத் தேடி வருகிறார்கள். தலைமறைவாக இருக்க வேண்டிய சூழலில் கூட, துப்பாக்கி வழக்கை விசாரிக்கும் போலீசாரையே சுட்டுக் கொன்று தப்பிக்கிறார்கள். பின்னர் துப்பாக்கிகளுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் செல்லும் இந்தப் பயணத்தில் தேவதாஸ் சந்திக்கும் ஆபத்துகள், அவருடன் சந்திரா (வாமிகா கபி) எப்படி இணைகிறார், இறுதியில் போலீஸ் – கேங்ஸ்டர் மோதலில் வெற்றி பெறுவது யார் என்பதுதான் ‘டிசி’யின் கதை.
தேவதாஸ் – பார்வதி காதல் உணர்வை ஒரு கேங்ஸ்டர் உலகுக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். கதை முழுவதும் ஸ்டைலிஷ் அணுகுமுறையுடன் நகர்கிறது. ஆனால் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை. ஆக்ஷன், காதல், பதட்டம் என ஒவ்வொரு காட்சியையும் அவர் இசையால் பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். இது பல இடங்களில் “அனிருத்தின் ஷோ” போலவே தோன்றுகிறது.
லோகேஷ் கனகராஜ்க்கு உணர்ச்சி வெடிப்புகள் நிறைந்த காட்சிகள் அதிகம் இல்லாததால், தன்னால் முடிந்த அளவில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். வாமிகா கபி பல காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்; குறிப்பாக தனிமை, குழப்பம், உடைந்த மனநிலை போன்ற உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவினாஷ், ஜவஹர் சக்தி, பிரணவ், சஞ்சனா, கஸ்தூரி ராஜா ஆகியோரின் துணை நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. கிரிஷ் தயாலின் வில்லத்தனமும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொழில்நுட்ப ரீதியாக முகேஷ் ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். காட்சிகள் மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரசன்னா ஜி.கே-வின் எடிட்டிங் விறுவிறுப்பை காப்பாற்றுகிறது. பி.சி ஸ்டண்ட்ஸ் அமைத்த சண்டைக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
ஆனால் படத்தின் முக்கிய குறை, உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு இல்லாததே. தேவதாஸ் மற்றும் அவனைச் சுற்றிய மனிதர்களின் உறவுகள் ஆழமாக பதியவில்லை. குறிப்பாக தேவதாஸ் – சந்திரா உறவில் எதிர்பார்த்த தாக்கம் உருவாகாததால், அதை மையமாகக் கொண்ட பல காட்சிகள் முழுமையாக வேலை செய்யவில்லை. போலீஸ் துரத்துகிறது என்பதைக் கடந்த பெரிய சிக்கல் இல்லாததால், ஒரு கட்டத்திற்கு பிறகு அதே துரத்தல் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களைப் போலவே, அதிகமான வன்முறையும் இதில் இடம்பெற்றுள்ளது.மொத்தத்தில், ‘டிசி’ ஸ்டைல் ஆக்ஷன், இசை, ஒளிப்பதிவால் கவர்கிறது.
