நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’, ‘எல்.ஐ.கே’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள அவர், தற்போது ‘பி.ஆர்.ஷோ’ என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, 6 இயக்குநர்கள் ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இணைந்து இயக்கும் ‘Aane Wala Star’ திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் குழுவில் இருந்த யஷ், தனுஷ், விஷால், இளம்பரிதி, நரேந்திரகுமார் மற்றும் சாணக்கியன் ஆகிய ஆறு இயக்குநர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இந்த இயக்குநர்களில் யஷ், ‘டியூட்’ படத்தின் ஹைதராபாத் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதீப் ரங்கநாதனின் தமிழ்ப் பேச்சை தெலுங்கில் மொழிபெயர்த்து சமூக வலைதளங்களில் வைரலானவர். அவருடன், ‘டிராகன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சாணக்கியனும் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர்களுடன் மேலும் நான்கு பேர் இணைந்து இந்தப் படத்தை இயக்குகின்றனர்.
இதற்கு முன்பு இரண்டு இயக்குநர்கள் இணைந்து ஒரு படத்தை இயக்குவது இந்திய சினிமாவில் புதுமையல்ல. ஆனால், இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இணைந்து ஒரே திரைப்படத்தை முழுமையாக இயக்குவது இதுவே முதல் முறை. தமிழில் வெளியான ‘சுயம்வரம்’ திரைப்படத்தை 14 இயக்குநர்கள் இயக்கியிருந்தாலும், அவர்கள் தனித்தனி பகுதிகளை மட்டுமே இயக்கினர். அதேபோல், பாலிவுட்டில் வெளியான ‘X: Past Is Present’ திரைப்படத்தையும் 11 இயக்குநர்கள் வெவ்வேறு பகுதிகளாக இயக்கியிருந்தனர். ஆனால், ஒரே திரைப்படத்தை முழுமையாக 6 இயக்குநர்கள் இணைந்து இயக்குவது இதுவே முதல்முறையாகும். அதுவே ‘தி ஆல்ஃபா யூனிட்’ன் மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது.
