நடிகர் தில்ஜித் தோசஞ்ச் நடித்துள்ள சட்லஜ் திரைப்படம் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், வெளியான 48 மணி நேரத்திலேயே இந்தியாவில் இருந்து படம் நீக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிற நாடுகளில் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை தொடர்ந்து பார்க்க முடிகிறது.
1990-களில் பஞ்சாப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் கல்லுகரா என்ற பெயரில் உருவான இப்படம், பின்னர் பஞ்சாப் 95 என்றும், இறுதியாக சட்லஜ் என்ற பெயரிலும் வெளியாகியது.
பல ஆண்டுகளாக சென்சார் சிக்கலில் சிக்கியிருந்த இந்தப் படத்திற்கு முதலில் 21 வெட்டுகளும், பின்னர் 120-க்கும் மேற்பட்ட மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக பலமுறை வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது ஓடிடியில் வெளியான பிறகும் இந்தியாவில் 48 மணி நேரத்திலேயே நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
—
