‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே வெற்றியைப் பதிவு செய்தார். தொடர்ந்து ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் வெற்றி பெற்ற அவர், சமீபத்தில் வெளியான ‘எல்ஐகே’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
‘பிஆர் ஷோ’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், தனது முதல் தயாரிப்பாக புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார். அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஆறு பேர் இணைந்து ‘தி ஆல்பா யூனிட்’ என்ற பெயரில் இந்தப் படத்தை இயக்குகின்றனர். கதையை பிரதீப் ரங்கநாதனே எழுதியுள்ள நிலையில், பெண்களை மையமாகக் கொண்ட கதையாக படம் உருவாகிறது.
மமிதா பைஜூ, ஸ்வாசிகா மற்றும் புதுமுக நடிகை அனாமிகா மஹி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
—
