ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில், சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய பேட்டியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, படப்பிடிப்பின் முதல் நாள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “ரஜினி சார் காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் நடந்து வரும் காட்சியை படமாக்கினோம். மானிட்டரில் அந்தக் காட்சியை பார்த்தபோது, அவரது கம்பீரமான நடை மற்றும் ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த உற்சாகத்தில் என்னையறியாமலே படப்பிடிப்பு தளத்திலேயே விசில் அடித்தேன்” என்று கூறினார்.
மேலும், ‘தர்மன்’ எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு. அதை நினைத்தாலே பதற்றமாக இருந்தது. ஆனால் மகிழ்ச்சியான மனநிலையுடன் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக உள்ளது. அவரது ஸ்டைலும், என்னுடைய திரைப்பட மொழியும் இணைந்து ரசிகர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்” என்று அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
