தமிழில் ‘தகராறு’, ‘வீர சிவாஜி’, ‘தேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கணேஷ் விநாயகன், தற்போது ‘அருள்வான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் மற்றும் கிருத்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘அருள்வான்’ திரைப்படம் வருகிற ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராமிய பின்னணியில், மனதை கவரும் ஃபீல் குட் திரைப்படமாக இப்படம் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அருள்நிதி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ‘அருள்வான்’ திரைப்படம் ரசிகர்களை சந்திக்க உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
