இயக்குனர் கே.பாக்யராஜ்‌‌ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இசைஞானி இளையராஜா!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக திகழ்ந்த கே. பாக்யராஜ் மறைவு, தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது தனித்துவமான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தால் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தார்.

திரைப்படத் துறையுடன் எழுத்துலகிலும் தனித்துவமான இடத்தைப் பெற்ற பாக்யராஜ், ‘பாக்யா’ வார இதழை தொடங்கி அதன் ஆசிரியராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டார். ‘புதிய வார்ப்புகள்’ படத்திற்காக சிறந்த வசனத்திற்கும், ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கும் தமிழக அரசின் விருதுகளை பெற்றார். மேலும், ‘ஒரு கை ஓசை’ திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதையும், ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், அதன் இந்தி ரீமேக்கான ‘ஆக்ரி ராஸ்தா’ படத்தை அமிதாப் பச்சனை கதாநாயகனாக வைத்து இயக்கியதன் மூலம் பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்தார்.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “இயக்குநர் பாக்யராஜ் மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. என் ஆரம்பகாலத்தில் மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்களில் ஒருவர் பாக்யராஜ். அவரது மறைவு என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. திரைக்கதை அமைப்பில் இந்திய அளவில் தலைசிறந்த இடத்தைப் பிடித்தவர் அவர்.

நான் தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் உடனடியாக சென்னை திரும்பி, அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு பாக்யராஜ் வழங்கிய பங்களிப்பு அளவிட முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading