மராத்தி திரையுலகின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக விளங்கும் மிதிலா பால்கர், ‘மஜா ஹனிமூன்’ என்ற குறும்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பாடகியாகவும் அறியப்படும் அவர், மராத்தி மொழியில் பிரபலமான ‘கப்’ பாடல் மூலம் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அந்த பாடல் யூடியூபில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. மேலும், போர்ப்ஸ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்கள் பட்டியலிலும், 35 வயதுக்குட்பட்ட இந்திய தொழில்முனைவோர் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்கள், வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்துவரும் மிதிலா, தமிழில் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் விஷ்ணு விஷாலின் சகோதரரான ராகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இருப்பினும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் மராத்தி திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது மிதிலா பால்கர், ‘சூப்பர் சுப்பு’ என்ற தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் அவர் நடிகர் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்திருக்கிறார். பாலியல் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் வரும் ஜூலை 2-ஆம் தேதி வெளியாக உள்ளது.
