இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கலிபா திரைப்படத்தில் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை எழுதியுள்ளார். முன்னதாக ஆடம் ஜோன், கடுவா போன்ற பிருத்விராஜ் படங்களுக்கும் ஜினு ஆபிரகாம் கதை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பழிவாங்கலை மையமாகக் கொண்ட திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள கலிபா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மேலும், நடிகர் மோகன்லால் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கலிபா திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம், இப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
