இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில், நடிகர் கே.ஜே.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர் மற்றும் அருண்முருகன் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், விளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் எளிய பின்னணியில் இருந்து வரும் வீரர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வடசென்னையைச் சேர்ந்த தடகள வீரரான சத்யா, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். ஆனால், வறுமை, சாதிய பாகுபாடு, அதிகாரமின்மை உள்ளிட்ட பல்வேறு சமூகச் சிக்கல்கள் அவரது பயணத்தில் தடையாக நிற்கின்றன. அனைத்து தகுதிகளும் இருந்தபோதிலும், அவரை காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுக்க முயற்சிக்கும் அதிகார அமைப்புகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்? தனது கனவை நிறைவேற்ற அவர் சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதையே படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.
‘அறம்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘ஹீரோ’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர், இந்தப் படத்தில் நடிகராகவும் சிறப்பான முயற்சியை வெளிப்படுத்தியுள்ளார். தீப்பெட்டி அளவிலான சிறிய வீட்டில் வாழ்ந்து, கனவை அடைய போராடும் இளைஞனாக அவரது நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் அவர் பேசும் வசனங்கள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விளையாட்டு வீரராக தோன்றுவதற்காக அவர் எடுத்துள்ள உடல் உழைப்பும் திரையில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. சில இடங்களில் நடிப்பு நாடகத்தன்மையுடன் இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் அதை மறக்கச் செய்கின்றன.
நாயகனின் தாயாக நடித்துள்ள ரமா, படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறார். படத்தின் தொடக்கக் காட்சியிலேயே சமூகத்தின் கசப்பான உண்மையை பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கொரு உணவு, குழந்தைகளுக்கொரு உணவு என்ற அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் சிந்திக்க வைக்கின்றன.
சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர். குறிப்பாக அரசு வழக்கறிஞராக நடித்துள்ள விஜி வெங்கடேஷின் நடிப்பு மிகவும் வலிமையாக அமைந்துள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், விளையாட்டுத் துறையில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம், சாதிய வேறுபாடு, அலட்சியம் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகளை தைரியமாக சுட்டிக்காட்டுகிறது. எளிய பின்னணியில் இருந்து வரும் திறமையான வீரர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும், அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் நடத்தும் முயற்சிகளையும் இயக்குநர் காட்சிக்கு காட்சி உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
“இப்படியே போனால் இந்தியாவில் ஒலிம்பிக் நடைபெறும்; ஆனால் ஒலிம்பிக்கில் இந்தியா இருக்காது”, “கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு ஏன் கிடைக்கவில்லை?” போன்ற வசனங்கள் இரண்டாம் பாதியில் திரைக்கதைக்கு கூடுதல் வலிமை சேர்க்கின்றன. பெண் விளையாட்டு வீராங்கனைகள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் முதல், ஏழை மக்களுக்கு எட்டாத நீதிமன்ற நடைமுறைகள் வரை பல சமூகப் பிரச்சினைகளை படம் நேர்மையாக பதிவு செய்கிறது. அதே நேரத்தில், சில இடங்களில் கருத்துகளை வலியுறுத்தும் முயற்சி பிரசாரத் தன்மையை எட்டுகிறது. நீளமான நீதிமன்றக் காட்சிகள் மற்றும் தேவையற்ற சில காட்சிகள் இரண்டாம் பாதியின் வேகத்தை சற்றே குறைக்கின்றன.
ஒளிப்பதிவாளர் விஸ்வநாதின் காட்சியமைப்பும், ராமு தங்கராஜின் கலை இயக்கமும் படத்திற்கு குறிப்பிடத்தக்க பலமாக அமைந்துள்ளன. ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. மல்யுத்த வீராங்கனைகள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்கள் நடத்திய போராட்டங்களை நிஜ வாழ்க்கை காட்சிகளுடன் இணைத்து காட்டியிருப்பது இயக்குநரின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்காமல், அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் மற்றும் சமூகச் சிக்கல்களை வலுவாக பேசும் படைப்பாக ‘அங்கீகாரம்’ திகழ்கிறது.
