முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சமந்தா!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யை நடிகை சமந்தா நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சந்திப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ள நீண்ட குறிப்பும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பதிவில் சமந்தா கூறியதாவது, “இன்று நான் சென்னைக்கு வந்தபோது எனக்குள் ஒரு அளவற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன். காரணம், நம்முடைய முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் ஒரு நாயகனாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டவர் அல்ல என்று நான் நீண்ட காலமாக நம்பி வந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “அவருடைய ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவருக்கு அளிக்கும் அன்பும் வரவேற்பும், அவர் இன்னும் பெரிய பொறுப்புகளுக்காக உருவாக்கப்பட்டவர் என்ற எண்ணத்தை எனக்குள் எப்போதும் ஏற்படுத்தியது. என்னை மிகவும் ஊக்கப்படுத்துவது அவரது துணிச்சல்தான். ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு துறையை விட்டு வெளியேறி, சவால்களும் ஆபத்துகளும் நிறைந்த புதிய களத்தில் காலடி எடுத்து வைப்பது சாதாரண விஷயம் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது, “ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையே அத்தகைய முடிவுகளை எடுக்க வைக்கிறது. நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், நம்மைத் தாண்டி சமூகத்திற்காக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்குகிறோம். அந்த அழைப்பை அனைவரும் உணரலாம். ஆனால் மிகச் சிலரே அதற்குச் செவிசாய்த்து களத்தில் இறங்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய சமந்தா, “விஜய் சார் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருக்கும் மக்களைக் கூட தனது செயல்களால் அவர் ஆச்சரியப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் வகிக்கும் பதவியின் காரணமாக அல்ல, அவர் எந்த விஷயத்தையும் அணுகும் உயர்ந்த நோக்கத்தின் காரணமாக அதனைச் சாதிப்பார் என்று நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும், “இந்த புதிய பயணத்தில் அவருக்கு தேவையான வலிமை, ஞானம் மற்றும் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கான துணிச்சல் கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும். வாழ்க்கை என்பது நாம் முதலில் கண்ட கனவை விடவும் மிகப் பெரியதாகவும் பிரம்மாண்டமாகவும் மாறக்கூடும்” என்று சமந்தா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தாவும் விஜய்யும் ஏற்கனவே ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது சமந்தாவின் இந்த சந்திப்பும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading