குறும்படங்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி கவனம் பெற்ற கிஷோர் குமார், தற்போது ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் மூலம் முழுநீள திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் ‘பேட்ட’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் சனந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுக நடிகை இமயா நடித்துள்ளனர். குறிப்பாக, இமயா தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சரான தங்கம் தென்னரசுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறை தொடர்பான கல்வியை வெளிநாட்டில் பயின்று முடித்துள்ள இமயா, நடிப்புக்கு வருவதற்கு முன்பு தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களை நேரடியாக கற்றுக்கொண்ட அவர், தற்போது ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த புதிய பயணம் குறித்து அவர் தனது மகிழ்ச்சியையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய இமயா, “நான் திரைத்துறைக்கு வர வேண்டும் என்ற விருப்பத்தை ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் நான் தொடர்ந்து முயற்சி செய்து, இந்தத் துறையின் மீதான என் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். அதன் பிறகு சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். மேலும், கதை விவாதங்களிலும் பங்கேற்று திரைப்பணிகளை நெருக்கமாக அறிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தற்போது ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளேன். எதிர்காலத்தில் நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்பட இயக்குநராகவும் செயல்பட வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனக்கு நிறைய கனவுகளும் இலக்குகளும் உள்ளன. அரசியலும் சினிமாவும் இரண்டுமே மிகவும் சவாலான துறைகள். தற்போது முழு கவனத்தையும் சினிமாவின் மீது செலுத்தி வருகிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக திரைத்துறையில் நடிக்க வந்திருப்பது நான்தான். எனவே, ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எப்போதும் எனக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார்.
