யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்… அதுதான் சினிமாவின் மிகப்பெரிய ரகசியம் – நடிகை மணிஷா ஸ்ரீ!

மாடலிங் மற்றும் விளம்பரத் துறையில் தனது பயணத்தை தொடங்கி, தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மணிஷா ஸ்ரீ தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “என்னைப் பார்த்தால் வடஇந்திய பெண் போல தோன்றலாம். ஆனால் நான் பிறந்து வளர்ந்தது முழுவதும் சென்னைதான். எனது அம்மா ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினேன். அதன்பிறகு ஏராளமான விளம்பரங்களில் நடித்தேன். 2014ஆம் ஆண்டு வெளியான ‘இருக்கு ஆனா இல்லை’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். பின்னர் 2016ஆம் ஆண்டு நான் பாடியும் நடித்தும் வெளியான ‘வான் போல் வருவான்’ என்ற ஆல்பம் பாடல் வெளியாகியது. அந்த பாடலுக்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருந்தார். அதே ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ திரைப்படத்தில் நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லியின் தோழியாக நடித்தேன். துடுக்காகவும் துருதுருவென பேசும் அந்த கதாபாத்திரம் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், “அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு நடிகர் நட்டி நடித்த ‘போங்கு’ திரைப்படத்தில் நடித்தேன். 2019ஆம் ஆண்டு ‘என் எதிரே ரெண்டு பாப்பா’ என்ற வெப் தொடரில் நடித்தேன். சமீபத்தில் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடித்த ‘மெசஞ்சர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தற்போது பிரபுதேவா நடித்துவரும் ‘உல்ப்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடிக்க உள்ளேன். தமிழில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “விளம்பரத் துறையில் இருந்தபோது அதிகமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் சினிமா என்பது உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பெரிய தளம். ஒரு போலீஸ் அதிகாரி, வக்கீல் அல்லது வேறு எந்த கதாபாத்திரமாக நடித்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்வது மிகவும் முக்கியம். ‘உல்ப்’ திரைப்படம் வெளியான பிறகு எனது நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும் என்று நம்புகிறேன். அந்த திரைப்படம் பார்வையாளர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும்.

ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிற்கும் கதாபாத்திரமாக அது அமையும் என்று எதிர்பார்க்கிறேன். நடிகர்கள் நட்டி மற்றும் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அனுபவம் மிகவும் பெரியதாக இருந்தது. ஷாம்லியிடம் அவரது குழந்தை பருவ திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளேன். நான் மிகவும் ரசித்த குழந்தை நட்சத்திரங்களில் அவரும் ஒருவர்” என்றார்.

இறுதியாக தனது எதிர்கால ஆசைகள் குறித்து பேசிய மணிஷா ஸ்ரீ, “ஒரே திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஒரே படத்தில் ஏற்று நடித்து எனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் பாடுவதிலும் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. எந்தக் கதை வந்தாலும் அதன் திரைக்கதையுடன் முழுமையாக ஒன்றிப்போய் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வர விரும்புபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம் தான் – பொறுமை. பொறுமையாக இருந்தால் சினிமா நம்மை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித தளர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். நமக்கு பிடித்த விஷயத்தை சாதிக்க தொடர்ந்து உழைக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். அதுதான் சினிமாவின் மிகப்பெரிய ரகசியம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading