எளியோருக்கும் வலிமையான அதிகாரம்… முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்!

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், தனது அரசை அமைப்பதற்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குநர் பா. ரஞ்சித், தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நீண்டகாலமாக இருந்து வரும் துறையாக இருந்தாலும், அதன் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு பட்டியலின மக்களின் அரசியலை முன்னிறுத்தி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு தற்போது அந்தத் துறை வந்துள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல், உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றங்களை மையமாகக் கொண்டு இந்தத் துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு சிறப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதேபோல் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஐயூஎம்.எல். கட்சியின் தோழர் ஷாஜஹான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதை சாத்தியமாக்கிய தமிழக முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading