பிரபல பாலிவுட் நடிகையான ரியா சக்ரவர்த்தி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலக இருப்பதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதை விட, நிஜ வாழ்க்கையின் தருணங்களை உணர்ந்து வாழ விரும்புவதாக அவர் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்த ரியா சக்ரவர்த்தி, “சமீப காலமாக நான் என்னையே கொஞ்சம் மிஸ் செய்து வருகிறேன். சமூக வலைதளங்கள் இப்போது எனக்கு ஒரு பாரமாகத் தோன்றுகின்றன. ஒரு தருணத்தை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்காமல், அந்த தருணத்தை நேரடியாக உணர்ந்து வாழ்வதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அமைதியையும், சாதாரணமான வாழ்க்கையையும் நான் இழந்துவிட்டேன் போல உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறிது காலத்திற்கு இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வெளியாகியதையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பின்னர், ரியா சக்ரவர்த்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் மிக அதிகமாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
