‘அதிரடி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

பசில் ஜோசப் தனது அண்ணன் படித்த அதே கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் சேருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில், அந்த கல்லூரி மாணவியும் பசிலின் காதலியுமான தர்ஷனா ராஜேந்திரன் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த கல்லூரியில் எந்த கலை நிகழ்ச்சியும் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில், தனது அண்ணன் மீது கொண்ட பாசத்தாலும், தனது சக மாணவியான ரியா சிபுவின் மீது கொண்ட காதலாலும், கல்லூரியின் பெருமையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அந்த கலை விழாவை மீண்டும் நடத்த பசில் ஜோசப் முயற்சி செய்கிறார். இறுதியில் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியையும் பெற்று, சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குநருமான வினித் சீனிவாசனை அழைக்கும் ஏற்பாடுகளையும் செய்கிறார்.

மறுபுறம், அந்த பகுதியைச் சேர்ந்த மிகப்பெரிய ரவுடியாக இருந்த டொவினோ தாமஸ், தனது பழைய வாழ்க்கையை விட்டு விலகி பாடகராக புதிய வாழ்க்கையை தொடங்க முயற்சி செய்கிறார். தனது தாய் கற்றுக் கொடுத்த பாடலை முதல் பாடலாக பாட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கல்லூரி விழாவை நடத்தும் முயற்சியில் இருக்கும் பசில் ஜோசப்பின் குழுவுக்கும், தனது இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ள டொவினோ தாமஸின் தரப்புக்கும் எதிர்பாராத மோதல் உருவாகிறது. இறுதியில் பசில் ஜோசப் திட்டமிட்டபடி வினித் சீனிவாசனை கல்லூரி மேடையில் பாட வைத்தாரா அல்லது டொவினோ தாமஸ் தனது எண்ணத்தை நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

பொதுவாக கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்படும் போட்டி, கலை நிகழ்ச்சி ஏற்பாட்டில் யார் பெரியவர் என்ற மோதல் போன்ற வழக்கமான கதைக்களத்தில் நகரும் இந்த படத்தில், திடீரென ஒரு ரவுடி கதாபாத்திரத்தை இணைத்து கதையை புதிய திசைக்கு கொண்டு சென்று விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறார்கள்.கல்லூரி இளைஞனாக பசில் ஜோசப் மிகவும் இயல்பாக பொருந்தியிருக்கிறார். ஒரு பக்கம் சாதாரண மாணவராக இருந்தாலும், தன் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படும் விதம் ரசிகர்களை கவர்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் டொவினோ தாமஸை சமாளிக்க முயற்சிப்பதும், வினித் சீனிவாசனை மேடையில் பாட வைக்க போராடுவதும் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அவர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதனை சமாளிக்கும் விதம் பார்வையாளர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

டொவினோ தாமஸ் கிட்டத்தட்ட இடைவேளைக்கு முன்பாகவே அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் அவர் ஒரு பாடகராக ரிகர்சலில் ஈடுபடுவது சாதாரணமாக தோன்றினாலும், திடீரென அவர் முன்னாள் ரவுடி என்பது வெளிப்படும் தருணம் ரசிகர்களுக்கு ஆச்சரியமான திருப்பமாக அமைகிறது. இடைவேளைக்குப் பிறகு அவர் வெளிப்படுத்தும் வில்லத்தனமும் அதிரடியும் படத்தின் வேகத்தை மேலும் உயர்த்துகிறது.

இந்த இருவருக்கும் இடையில் சிக்கிக் கொள்கிற வினித் சீனிவாசன், தன்னை கடத்திச் செல்லும் காட்சிகளிலும், தப்பிக்க முயலும் தருணங்களிலும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் டொவினோ தாமஸை சமாளிக்க அவர் எடுக்கும் முயற்சி ரசிகர்களிடையே கைதட்டல்களை பெற்றுக் கொள்கிறது. ஏற்கனவே ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரியா சிபு, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனுக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது அழகும் சிரிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

‘மின்னல் முரளி’ திரைப்படத்திற்கு கதை எழுதியதுடன், இயக்குநர் பசில் ஜோசப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் அனிருத்தன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, கல்லூரி கலை விழாவையும் ரவுடியின் இசை நிகழ்ச்சியையும் இணைத்து புதுமையான திரைக்கதையுடன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading