தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மாளவிகா மோகனன். தற்போது அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்த மாளவிகா மோகனன், அங்கு செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சென்னை எனக்கு எப்போதும் இரண்டாவது வீடு போன்ற உணர்வை தருகிறது. உடல்நலம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. தற்போது தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு திரைப்படத்திலும், நடிகர் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “புதிதாக அமைந்துள்ள விஜய் அரசு குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “விஜய் என்னுடைய நெருங்கிய நண்பர். இது அவரது நீண்ட நாள் கனவு என்பதை நான் நன்றாக அறிவேன். அவர் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன், நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்த விதமும், மாளவிகா மோகனனின் இயல்பான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
