சென்னை ஏழுகிணறு குற்றவியல் நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு நகரும் கதையாக ‘கருப்பு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ‘பேபி கண்ணன்’ என்ற ரவுடி வக்கீல் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். நீதிபதி நட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தனது குழுவினருடன் சேர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே தனி ஆதிக்கம் செலுத்தும் வக்கீலாக அவர் காட்சியளிக்கிறார். இதற்கிடையில், தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து சென்னை வரும் இந்திரன்ஸ், மருத்துவ செலவுக்காக கொண்டு வந்த நகையை சென்னை ரயில் நிலையத்தில் இழந்து தவிக்கிறார். அந்த நகை போலீஸ் மற்றும் நீதிமன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறது. அவருக்கு உதவுவது போல நடித்து ஏமாற்றும் வக்கீலாக ஆர்.ஜே. பாலாஜி செயல்படுகிறார். ஒரு கட்டத்தில், நீதிமன்ற வாசலில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் மிளகாய் அரைத்து “எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று இந்திரன்ஸ் வேண்டிக்கொள்ள, கருப்பசாமியே வக்கீலாக அவதரிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் சூர்யா களமிறங்குகிறார். பின்னர் நீதிமன்றத்தில் அவர் நடத்தும் போராட்டமும், இந்திரன்ஸ் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நீதி பெற்றுத் தருகிறாரா என்பதுமே படத்தின் மீதமுள்ள கதையாக நகர்கிறது.
கடவுள் நம்பிக்கையையும், நீதித்துறையின் மறுபக்கத்தையும் இணைத்து ஒரு வணிக ரீதியான திரைப்படமாக ‘கருப்பு’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஹீரோ இல்லாமல் கதை நகர்கிறது. அந்த பகுதிகளில் இந்திரன்ஸ் சந்திக்கும் வேதனைகள், சாதாரண மக்கள் போலீஸ் மற்றும் நீதிமன்றங்களில் எவ்வாறு சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்திய விதம் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக, தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக தவிக்கும் தந்தையாகவும், இழந்த நகையை மீட்டெடுக்க போராடும் மனிதராகவும் மலையாள நடிகர் இந்திரன்ஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரது அப்பாவித்தனமும், கோபமும், ஒரு கட்டத்தில் விரக்தியில் அவர் செய்யும் செயலும் உணர்ச்சிவசப்படுத்துகின்றன. அவரின் மகளாக நடித்துள்ள அனகா மாயா ரவியும் தனது நடிப்பால் தாக்கம் ஏற்படுத்துகிறார். தங்களுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து அவர் பேசும் உருக்கமான வசனங்களும், நீதிமன்றத்தில் தனது உடை சுதந்திரம் குறித்து அவர் ஆவேசமாக பேசும் காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளது. அப்பா – மகள் உணர்வுகளை மையமாகக் கொண்ட காட்சிகளே படத்தின் பெரிய பலமாக திகழ்கின்றன.
சிறிது தாமதமாக வந்தாலும் மாஸாக கருப்பசாமி கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார் சூர்யா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது கெட்டப், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை கவர்கின்றன. குறிப்பாக, கருப்பசாமியாக அவர் ஆடும் ஆட்டமும், அதிரடி சண்டைக் காட்சிகளும், அவர் பேசும் வசனங்களும் திரையரங்கில் கைதட்டல் பெறுகின்றன. நீதிக்காக போராடும் கடவுள் வடிவிலான வக்கீலாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதன் மூலம் சொல்லப்படும் கருத்துகளும், கடவுள் நம்பிக்கையை மையப்படுத்திய காட்சிகளும் படத்திற்கு வணிக ரீதியான வலிமையை கொடுத்துள்ளன. கிளைமாக்ஸில் கருப்பசாமி வேடத்தில் அவர் ஆடும் ஆட்டமும், இறுதியில் வரும் திருப்பமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. சூர்யா கடவுள் கதாபாத்திரத்தில் வருவதால் திரிஷா இருந்தாலும் வழக்கமான காதல் காட்சிகள் இடம்பெறவில்லை. வண்ணமயமான பாடல்களும் இல்லை. அதே நேரத்தில் சூர்யா – திரிஷா இடம்பெறும் கருப்பு கோவில் பாடல் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி ‘பேபி கண்ணன்’ என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். சில இடங்களில் அவரது வசனங்களும், உடல் மொழியும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் படத்தின் இயக்குனர் அவரே என்பதால், தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சக்திவாய்ந்த ஒரு வில்லன் இருந்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்ற உணர்வும் எழுகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் நகைச்சுவை கலந்த வில்லத்தனம் ஓரளவுக்கு மட்டுமே வேலை செய்கிறது.
திரிஷாவுக்கு சில முக்கியமான காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியிலும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நடிகைகள் ஷிவாதா மற்றும் சுவாசிகாவும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் அளவான நடிப்பை வழங்கியுள்ளனர். வழக்கமான அரசியல்வாதி வில்லனாக வரும் வேல ராமமூர்த்தி சற்று சலிப்பை ஏற்படுத்துகிறார். கோடாங்கி வடிவேலு, தீபா, மாறன் ஆகியோரின் காட்சிகள் ஓரளவு நன்றாக அமைந்துள்ளன. தனியாக நகைச்சுவைக்காக எந்த டிராக்கும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர நீதிபதியாக வரும் நட்டியின் நடிப்பும், அவர் இடம்பெறும் நீதிமன்ற காட்சிகளும் நீதித்துறையின் மறுபக்கத்தை தைரியமாக வெளிப்படுத்துகின்றன. நீதி கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடும் பூபாலன் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.
நீதிமன்ற காட்சிகள், சண்டைக் காட்சிகள் மற்றும் கருப்பசாமி சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணுவின் திறமை தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த கதைக்கு சாய் அபயங்கரின் இசை முழுமையாக பொருந்தவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. அவரது பாடல்களும் பின்னணி இசையும் ஸ்டைலாக இருந்தாலும், மண்வாசனை கொண்ட இந்த கதையுடன் முழுமையாக ஒன்றிணையவில்லை. குறிப்பாக கருப்பசாமி வரும் காட்சிகளில்கூட கிராமிய இசையின் தாக்கம் குறைவாகவே உள்ளது. சாமியாட்ட உணர்வை தரக்கூடிய இசை அமைப்பு இருந்திருந்தால் அந்த காட்சிகள் இன்னும் வலிமையாக இருந்திருக்கும். அதேபோல், உள்ளூர் சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் நவீன பின்னணி இசையும் சற்று அந்நியமாக தோன்றுகிறது. கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்பாட்டை குறைத்திருந்தால், அந்த காட்சிகளின் வீரியம் மேலும் அதிகரித்திருக்கும்.
வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள், சட்டத்தின் ஓட்டைகள், நீதிபதிகளின் மறுபக்கம், தவறான மனிதர்களின் ஆதிக்கத்தால் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகும் சூழல், பணமும் அதிகாரமும் சட்டத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் படம் பேசுகிறது. அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையை உயர்த்திப் பிடித்திருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம். படம் பார்க்கும் பலருக்கும் தங்களது குலதெய்வம் நினைவுக்கு வரும் வகையில் சில காட்சிகள் அமைந்துள்ளன. மொத்தத்தில், ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் ஒரு வணிக திரைப்படமாக அமைந்துள்ளது.
