சமீபத்திய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் முக்கியமான சாதனையை பதிவு செய்துள்ளது. மேலும் ஆட்சியை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது காங்கிரஸுடன் கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை உறுதி செய்ய தேவையான அரசியல் நடவடிக்கைகளில் விஜய் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் நடிகை ஸ்ரேயா சரண், விஜயின் அரசியல் வெற்றி குறித்து அளித்துள்ள பேட்டி கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, இது வெறும் இரண்டு ஆண்டுகளின் பயணம் அல்ல. பல ஆண்டுகளாக அவர் அமைதியாக செய்து வந்த கடின உழைப்பின் விளைவு இது. அந்த உழைப்பை அவர் முழு மனதுடன் செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு உதவிகள், நன்கொடைகள், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் போன்ற சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடியாக அரசியலுக்குள் வருவதற்கு முன்பே, அதற்கான பல வேலைகளை அவர் செய்து வந்தார்.
நான் அறிந்த விஜய் ஒரு அரசியல்வாதி அல்ல. ஆனால் அவர் சிறப்பாக செயல்படுவார், மக்களுக்காக மாற்றத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருக்கிறது. நான் ஹைதராபாத்தில் இருந்தபோது கூட, பலர் விஜய்க்கு வாக்களிப்பதற்காக சென்னை சென்று மீண்டும் திரும்பி வந்ததை பார்த்தேன். பொதுவாக தேர்தலில் வாக்களிப்பதற்கே பலர் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் விஜய்க்காக மக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தது அவருக்கு உள்ள மக்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறது.
ஒரு நடிகராக விஜய் மிகவும் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கொண்டவர். அதேபோல் ஒரு அரசியல்வாதியாகவும் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் அவரது பணிகளை கவனித்து வருகிறார்கள். அதனால்தான் அவரை மதிக்கிறார்கள். அவர் நடிகராக மட்டும் அல்லாமல், மனிதநேயமான ஒருவராகவும் மக்களால் நேசிக்கப்படுகிறார்.
இதற்கு ஒரு சம்பவத்தை நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். கடந்த ஏப்ரல் மாதத்தில் 45 டிகிரி வெயிலில் நாங்கள் படப்பிடிப்பில் இருந்தோம். வெளியே நின்றுகொள்ள கூட முடியாத வெப்பம் நிலவியது. அப்போது பல ரசிகர்கள் விஜயுடன் புகைப்படம் எடுக்க வந்தனர். அவர் தனது வேனிலிருந்து வெளியே வந்து, ஒவ்வொருவருடனும் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவரைப் பார்க்க தொலைதூரம் வந்தவர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை அதுதான். மேடையில் பேசும் போது கூட அவர் மிகவும் சிறப்பாக பேசுகிறார். அவருடைய வசீகரமும் தாக்கமும் மிகவும் வலிமையானது. ‘நான் முதலமைச்சரான பிறகும் முதலமைச்சர் போல நடிக்க மாட்டேன்’ என்று அவர் கூறியிருந்தார். அதனால், தனது முழு கவனத்தையும் மக்களின் நலனில் செலுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.
