ஒரே சீசனில் 100க்கும் மேற்பட்ட எபிசோட்களுடன் உருவாகும் வெப் தொடர்கள் மிகச் சிலவே உள்ளன. அந்த வகையில் ஹார்ட்பீட் (100 எபிசோட்கள்), உப்பு புளி காரம் (128 எபிசோட்கள்), போலீஸ் போலீஸ் (100 எபிசோட்கள்) போன்ற தொடர்கள் முன்னதாக வெளியானவை. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்ற புதிய வெப் தொடர் தமிழில் தயாராகியுள்ளது. உப்பு புளி காரம் தொடரை தயாரித்த அதே நிறுவனம் இந்த தொடரையும் தயாரித்துள்ளது. உப்பு புளி காரம் மற்றும் போலீஸ் போலீஸ் போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இந்த தொடரையும் இயக்கியுள்ளார். இதில் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்த்ரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரை பற்றி இயக்குனர் சிதம்பரம் மணிவண்ணன் கூறுகையில், இதில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். துணி விற்பனை நிலையம் நடத்தும் குடும்பத் தலைவராக போஸ் வெங்கட் கட்டுப்பாடான குணநலனுடன் நடித்துள்ளார். குடும்பத்தை ஒருங்கிணைத்து அமைதியாக வழிநடத்தும் இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
மென்மையான உணர்வுகளும், நகைச்சுவை அம்சங்களும் இணைந்து, அனைத்து தரப்பினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில், நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில்கள், குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்த உறவுகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
ஒவ்வொரு வாரமும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் தொடரின் புதிய எபிசோட்கள் வெளியிடப்படும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதை அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
