சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்… வெளியான நியூ அப்டேட்!

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லவ் & வார்’. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இராணுவ வீரர்களை மையமாகக் கொண்டு உருவாகும் கதையைக் கொண்டதாக இந்த திரைப்படம் கூறப்படுகிறது. மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. முதலில் 2025ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ‘லவ் & வார்’, பின்னர் 2026 மார்ச் 20, ஏப்ரல் 14 மற்றும் ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டு வந்தது. தற்போது, இப்படம் அடுத்த ஆண்டு குடியரசு தின வார இறுதியில், அதாவது 2027ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் திரைப்படங்கள் பொதுவாகவே மிகுந்த பிரம்மாண்டத்துடன் உருவாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், இப்படம் தாமதமாகி வருவதற்கான காரணங்களாக பல அம்சங்கள் குறிப்பிடப்படுகின்றன. கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள், ஒவ்வொரு அம்சத்திலும் பன்சாலி எதிர்பார்க்கும் மிகுந்த நேர்த்தி, மேலும் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோரின் தேதிகள் ஒத்துவராதது போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீதப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் முடிவடையும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. மேலும், ரன்பீருடன் ‘சாவரியா’ (2007) திரைப்படத்திற்குப் பிறகும், ஆலியாவுடன் ‘கங்குபாய் கத்தியாவாடி’ (2022) திரைப்படத்திற்குப் பிறகும் மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading