தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்று அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மக்கள் சேவையை முன்னிலைப்படுத்தியபடி, அதே நேரத்தில் சினிமா பயணத்தையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவது அவரது தனித்துவமாகும். இதேபோன்று, தமிழில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, வரவிருக்கும் தேர்தலில் தனியாக போட்டியிடத் தயாராகி வருகிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவன் கல்யாணிடம், “விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன? அவருக்கு நீங்கள் ஏதேனும் அறிவுரை வழங்கியுள்ளீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “விஜய் மட்டுமல்ல, பொதுவாகவே யாருக்கும் நான் அறிவுரை வழங்கும் பழக்கம் இல்லை. அது என் சொந்த பிள்ளைகள் என்றாலும் கூட நான் அறிவுரை சொல்ல மாட்டேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சிந்தனை திறன் உள்ளது. அதுபோலவே விஜய்க்கும் உள்ளது. அவர் ஒரு பெரிய நடிகர்..அவருக்கு நான் அறிவுரை கூற வேண்டிய அவசியமே இல்லை. ஜனநாயக நாட்டில், எந்த குடிமகனும் மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரலாம், அரசியல் கட்சியைத் தொடங்கலாம்,” என்று தெரிவித்தார்.
—
