தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால், அதன் பின்னர் ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான அவரது ‘ஆர்யன்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ திரைப்படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பை திபு நினன் தாமஸ் மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது, இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, ‘இரண்டு வானம்’ திரைப்படம் கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
