அதிகமான சம்பளம் வழங்கினாலும், சில கதைகளை ஏற்கமுடியாது… நடிகை மிருணாள் தாக்கூர் டாக்!

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1964ஆம் ஆண்டு காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில், காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியாற்றும் ஒரு ராணுவ அதிகாரி, முகவரி இல்லாமல் தன்னிடம் வரும் காதல் கடிதங்களை வாசித்து, அதை அனுப்பிய பெண்ணைத் தேடி கண்டுபிடிக்கும் கதை மிக உணர்ச்சிப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. பின்னர், அந்த இருவரும் ஒன்றாக வாழ முடிந்ததா என்பதையே படத்தின் மையக் கருத்தாக அமைத்துள்ளனர். காதல் கடிதங்களை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கிடையில், மிருணாள் தாக்கூர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் ‘கோயிட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படியான நிலையில், தனது படத் தேர்வுகள் குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். 

சில திரைப்படங்கள் அதிகமான சம்பளம் வழங்கினாலும், மனதிற்கு திருப்தி அளிக்காத கதைகளாக இருந்தால் அதை ஏற்க முடியாது என்பதால், பல வாய்ப்புகளை கனத்த மனதுடன் மறுத்ததாக கூறியுள்ளார். ‘சீதா ராமம்’ படத்தின் சீதா மகாலட்சுமி மற்றும் ‘ஹாய் நானா’ படத்தின் யஷ்னா போன்ற கதாபாத்திரங்கள் தனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்துள்ளதாகவும், அதுபோன்ற அர்த்தமுள்ள கதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். பெரிய வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதையைத் தேர்வு செய்வதே தனது முன்னுரிமை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply