மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட்ரியாட்’. இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனால் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பேட்ரியாட்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் வகையை சேர்ந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மம்முட்டி மற்றும் மோகன்லாலின் சண்டைக் காட்சிகள் மிகத் துல்லியமாக எடிட் செய்யப்பட்டிருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
