நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் “மகுடம்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, படத்தின் மீதான தனது உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
விழாவில் பேசிய அஞ்சலி, “ஒருவரின் முதல் இயக்கம் என்பது மிகவும் சிறப்பான தருணம். ‘மகுடம்’ படத்திற்காக விஷாலும், முழு படக்குழுவும் போட்ட உழைப்பை நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அதனால் இந்தப் படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் அனைத்திற்கும் அவர் தகுதியானவர்” என்றார்.
தனது கதாபாத்திரம் குறித்து அவர் கூறும்போது, “நான் நடித்த அன்னபூரணி என்ற பாத்திரம் என்னை மிகவும் பாதித்தது. டப்பிங் முடித்த பிறகும் அந்த மனநிலையிலிருந்து உடனே வெளியே வர முடியவில்லை. என் திரைப் பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று” என்று தெரிவித்தார். மேலும், தமிழில் முதன்முறையாக இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், அது தன்னுக்கு புதிய அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
ஜி.வி. பிரகாஷின் இசையைப் பாராட்டிய அவர், ஏற்கெனவே வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். “திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்” என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.இறுதியாக, “ஒரு நண்பராகவும், நலம்விரும்பியாகவும், விஷாலின் முதல் இயக்கப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்” என்று அஞ்சலி கூறினார்.
