‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடலை பைக்கில் பயணம் செய்யும்போது தான் கம்போஸ் செய்தேன்… ஜிவி பிரகாஷ் சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவர் இசையமைத்த திரைப்படங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று மதராசப்பட்டினம் ஆகும். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற பாடல் உருவான விதத்தைப் பற்றி அவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஒரு இசையமைப்பாளருக்கான யோசனை எங்கு இருந்து வரும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. என் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்றான ‘பூக்கள் பூக்கும்’ பாடல், ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்திற்காக நான் உருவாக்கியது ஒரு பைக் பயணத்தின் போது தான். நான் என் நண்பருடன் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார், நான் பின்னால் அமர்ந்திருந்தேன். அந்த நேரத்தில் இந்தப் படத்தின் கதை குறித்து சிந்தித்தபோது, திடீரென ‘தான தோம் தன னா’ என்ற ஒரு இசை யோசனை தோன்றியது.

அந்த யோசனை வந்த உடனே, நண்பரிடம் பைக்கை நிறுத்தச் சொல்லி, என் மொபைல் போனில் அந்த ட்யூனை பாடி பதிவு செய்துகொண்டேன். பின்னர் வீட்டிற்கு சென்று பியானோவில் அந்தப் பாடலை இசைத்துப் பார்த்தேன். அதன் பின்னர் இயக்குநரை அழைத்து அந்த ட்யூனை கேட்க வைத்தேன். அதை கேட்ட அவர், ‘இந்த பாடலை பயன்படுத்துவதற்கு படத்தில் பொருத்தமான சூழல் இல்லை’ என்று கூறினார். அதற்கு நான், ‘அந்தப் பாடலுக்காகவே ஒரு புதிய சூழலை உருவாக்குங்கள், இது மிகவும் அழகான பாடல்’ என்று கூறினேன். அதன் பின்னர் அவர் அதற்கான சூழலை உருவாக்கினார். இறுதியில், அந்தப் பாடல் என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading