“மூன்று நாட்கள் பட்டினி கிடந்தோம்!” – சென்னையின் ஆரம்பகால வாழ்க்கையை நினைவுகூர்ந்த இளையராஜா

நவராத்திரியை முன்னிட்டு, இசைஞானி இளையராஜா வீட்டில் கொலு நிகழ்ச்சியுடன் அன்னதானமும் பலகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் தானும் தனது நண்பர்களும் பசியுடன் இருந்த அனுபவத்தை நினைவுகூரும் வகையில், தற்போது பலருக்கு உணவு வழங்கும் வழக்கத்தை அவர் தொடர்ந்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது வீட்டுக் கொலு மற்றும் சென்னையில் ஆரம்பகாலத்தில் தான் எதிர்கொண்ட சிரமங்கள் குறித்து இளையராஜா வீடியோ ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “1968-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நவராத்திரி காலகட்டத்தில்தான் நான் சென்னை வந்தேன். அப்போது நானும், எனது அண்ணன் பாஸ்கரும், பாரதிராஜாவும் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தோம்.

“அந்தக் காலத்தில் வடபழனி கோயிலுக்கு எதிரே உள்ள வீதியில் நிறைய கடைகள் இருக்கும். நவராத்திரி நேரத்தில் மாலையில் பொரிகடலை, சுண்டல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். எல்லோரும் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். “நானும் பாரதிராஜாவும் பாஸ்கரும் எந்தெந்தக் கடைகளில் கொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று வரிசையில் நின்று வாங்குவோம். பின்னர் அவற்றை அறைக்குக் கொண்டுவந்து, காகிதத்தை விரித்து அதில் பொரி, கடலை, சுண்டல் எனக் கிடைத்தவற்றைப் போட்டு சாப்பிடுவோம். அதன் பிறகு குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துக்கொள்வோம். இப்படித்தான் அந்த நவராத்திரி நாட்கள் கழிந்தன” என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading