பாலிவுட் திரையுலகில் தனது நடனத் திறமையாலும், வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை நோரா பதேஹி. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், இந்தியத் திரையுலகில் தனது திறமையை நிரூபித்து தனக்கெனப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடனமாடியுள்ளார். இதுதவிர, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ படத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார். இதன் மூலம் கோலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நோராவிடம் வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், மனதுக்கு சரியெனப் படுவதைத் தாமதிக்காமல் செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
குறிப்பாக, ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதிகம் யோசிக்காமல் உதவ வேண்டும் என்றார். அதேபோல், மற்றவர்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்று யோசித்து நமது மகிழ்ச்சியைத் தியாகம் செய்யக்கூடாது என்றும் கூறினார். வாழ்க்கை அற்புதமானது என்றும், அதில் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நோரா, அந்த மகிழ்ச்சிக்குத் தடைகளை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
