நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யஷ், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ரன்பீர் கபூர் குறித்துப் பேசிய யஷ், “அவர் மிகவும் தன்னடக்கமான, கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். தன்னை முழுமையாகக் கதாபாத்திரத்துக்கு அர்ப்பணித்துக்கொள்பவர். அவ்வளவு கவனமாக நடிப்பது எளிதான விஷயமல்ல. அவரது அர்ப்பணிப்புக்கு இறைவன் ஆசீர்வாதம் வழங்குவார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சாய் பல்லவி குறித்துப் பேசிய அவர், “சாய் பல்லவி எப்போதும் கடவுள் பக்தியுடன் இருப்பார். படப்பிடிப்பின்போது அவரை ஐந்து நிமிடங்கள் பார்த்தால்கூட சீதையைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு அவர் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வாழ்கிறார். எங்கு பேசினாலும் கடவுளைப் பற்றிப் பேசுவார். “சீதையாக சாய் பல்லவி நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சீதையின் புனிதத்தையும் அவருக்குள் இருக்கும் பிரகாசத்தையும் தனது கலையின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இறைவன் அவருக்கு நன்மைகளை வழங்குவார்” என்று பாராட்டியுள்ளார்.
