‘பாய்ஸ்’ திரைப்படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலான ஆங்கிலம் பேசும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் பரத். அதன் பின்னர் ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
2019ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் திரைப்படத்தில் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அந்த படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தற்போது ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் நடித்த சங்கீதா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்கிறார். கடந்த ஆண்டே இப்படத்தின் டீசர் வெளியானது. தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
