நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
இதுவரை அந்தப் படத்தின் தணிக்கை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தெளிவான தகவல் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதன் வெளியீடு குறித்து இன்னும் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் இந்தப் படத்தை திரையரங்கு வெளியீட்டிற்காக வாங்கிய விநியோகஸ்தர்களும், ஓடிடி உரிமையை பெற்ற நிறுவனமும் தங்களது முதலீட்டில் சிக்கலை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை சுமார் ரூ.120 கோடி தொகைக்கு வாங்கியிருந்த அமேசான் ஓடிடி நிறுவனமும் தற்போது அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வெளியீட்டிற்கு முன்பே முழு தொகையும் வழங்கப்படும். ஆனால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லாததால், அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
