‘கன்டென்ட் தான் கிங்’ என்பதை தாய் கிழவி படம் நிரூபித்துள்ளது – நடிகை ராதிகா டாக்!

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவக்குமார் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, உண்மையான வெற்றியை கொண்டாடும் மகிழ்ச்சியோடு இந்த மேடையில் நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த படம் ரூ.150 டிக்கெட் விலையில் வெளியாகி ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது உண்மையான வெற்றியாகும் என்றும் கூறினார். சில ஹீரோக்களின் படங்களில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் குறைந்த டிக்கெட் விலையிலேயே ‘தாய் கிழவி’ இப்படியான வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் வசூலே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்ததாகவும், இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறியதாகவும் ராதிகா தெரிவித்தார். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோர் தங்கள் காலகட்டங்களில் சினிமாவின் போக்கை மாற்றியவர்கள் போல, தற்போது அந்த மாற்றத்தை உருவாக்கும் இயக்குனராக சிவக்குமார் முருகேசன் உருவாகியுள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.

தனது 48 ஆண்டுகால கலைப் பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை காணும் வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றும் ராதிகா கூறினார். ‘சித்தி’ தொடர் வெற்றிக்குப் பிறகு பெண்கள் இவ்வளவு அளவில் இணைந்திருப்பதை இந்தப் படத்தின் மூலம் தான் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார். நேற்று மட்டும் ஆறு கதைகளை கேட்டதாகவும், அவற்றில் அனைத்திலும் ‘கிழவி’ கதாபாத்திரம் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சினிமா தொழிலில் பெண்களுக்கு ஒரு வகையான அச்சம் இருப்பது இயல்பு என்றாலும், அந்த அச்சத்தை தன் மனதில் இடம் கொடுக்க மாட்டேன் என்றும் ராதிகா கூறினார். ‘தாய் கிழவி’ படம் வெளியாகியதன் பின்னர் சினிமா துறையே ஆச்சரியத்தில் உள்ளது. தயாரிப்பாளர்கள் பலரும் திரையரங்குகளுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு இந்த வசூல் உண்மையா என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த படம் ‘கண்டெண்ட் தான் கிங்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், பெண்களின் குரலை கேட்டு அதை வெளிப்படுத்தும் திரைப்படமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தப் படத்தில் முதல் முறையாக லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளதாகவும், தமிழ்ச் சினிமாவில் இப்படிப்பட்ட முறையில் சம்பளம் பெற்ற முதல் நடிகை தானாக இருக்கலாம் என்றும் ராதிகா தெரிவித்தார்.

பெண்கள் முன்னேற்றம் கதையில் மட்டும் சொல்லப்படாமல், ஹீரோவுக்கு இணையாக லாபத்தில் பங்கையும் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு இந்த பெருமை சேரும் என்றும் அவர் கூறினார். மேலும் ‘தாய் கிழவி’ திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தனது வாழ்க்கையில் ‘எஸ்.கே.’ என்ற பெயருடன் இரண்டு முக்கியமானவர்கள் உள்ளனர். ஒருவர் சரத்குமார், மற்றொருவர் சிவகார்த்திகேயன் எனவும் ராதிகா கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading