இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியா திரைப்படங்களில் ஒன்றாக அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இணையும் ‘ஏஏ22 – எ6’ திரைப்படம் கருதப்படுகிறது. இந்தப் படத்தைப் பற்றிய சில ஆரம்ப தகவல்கள் படம் தொடங்கிய காலத்தில் வெளியானாலும், அதன் பிறகு பெரிதாக எந்த புதிய அப்டேட்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த திரைப்படத்தின் முதல் முன்னோட்ட வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த முன்னோட்டத்தை ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது அல்லு அர்ஜுன் தனது முழு கவனத்தையும் இந்த ஒரே திரைப்படத்தில் மட்டுமே செலுத்தி நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகே அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. ‘ஏஏ22 – எ6’ திரைப்படம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பிறகே அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதியை அறிவிக்க படக்குழு முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
