பாலிவுட் திரையுலகின் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த அவர், அதன் பின்னர் ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். தற்போது ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையில், ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவிய நிலையில், அதுகுறித்து ஜான்வி கபூரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “எனது மகளின் திருமணம் குறித்து வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. யாரும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜான்வி கபூரின் திருமணம் தொடர்பாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
