இயக்குநர்களாக அறிமுகமாகி பின்னர் நட்சத்திர நடிகர்களாக உயர்ந்துள்ள சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கு முன்பும் இவர்கள் இருவரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குநர் ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ளார். ராகவ் ரமேஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் ஒரு பயணத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. ‘சில பயணங்கள் உங்களை மிகவும் தூரம் அழைத்துச் செல்லும்; சில பயணங்கள் உங்களை வீட்டிற்கே திரும்ப அழைத்துச் செல்லும்’ என்ற வாசகம் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளதால், மறக்க முடியாத பயண அனுபவத்தை விவரிக்கும் படைப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘கார்மேனி’ என்ற இந்த பாடலை குல்ஸ் மற்றும் மணி அமுதவன் இணைந்து எழுதியுள்ளனர். பாடகி ஷ்ரேயா ஸ்ரீரங்கா இந்த பாடலைப் பாடியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாக உள்ளது.
