‘தம் லகா கே ஹைசா’, ‘சாண்ட் கி ஆங்க்’, ‘சோஞ்சிரியா’, ‘பதாய் ஹோ’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை பூமி பட்னேகர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள அவர், திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொழில் துறையிலும் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ‘இமாலயா’ என்ற குடிநீர் விற்பனை நிறுவனத்தின் மூலம் தொழில் அதிபராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது வாழ்க்கையைப் பற்றி பேசிய பூமி பட்னேகர், கடந்த காலத்தில் சில தவறான முடிவுகளை எடுத்ததாகவும் அதற்காக தற்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் விளக்கமாக கூறியதாவது: “என் வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருக்கிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சினிமாவிலும், தொழில்துறையிலும் பல முடிவுகளை அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப எடுத்தேன். ஆனால் பின்னர் பார்த்தபோது, அந்த முடிவுகள் என்னுடைய நிலையை ரசிகர்கள் மத்தியில் வேறுபட்ட வகையில் வெளிப்படுத்திவிட்டதாக புரிந்தது.
பெரிய வெற்றி படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சில நல்ல கதைகளை நான் தவறவிட்டேன். அந்த முடிவுகள் எனக்கு ஒரு பாடமாக அமைந்தன. இனி அந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்று உறுதியான முடிவுக்கு வந்துள்ளேன். அதேபோல பாலினத்தை கேலி செய்யும் அல்லது விமர்சிக்கும் விதமாக உருவாகும் கதைகளில் இனி நான் நடிக்க மாட்டேன் என்று நான் தீர்மானித்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
