இந்தியில் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜூன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் ஒரு உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலகளவில் இந்த திரைப்படம் சுமார் 1300 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘துரந்தர் தி ரிவென்ச்’ என்ற பெயரில் அதே கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடி காட்சிகளால் நிரம்பியுள்ளது. துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, அதிரடி ஸ்டன்ட் காட்சிகள் போன்றவை அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த டிரைலர் இந்தியில் மட்டும் வெளியாகியுள்ளது.
இன்னும் சில நாட்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டும் தியேட்டர்களில் வெளியாகி பின்னர் ஓடிடி தளங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. ஆனால் ‘துரந்தர் 2’ திரைப்படம் பான் இந்தியா முறையில் நேரடியாக பல மொழிகளில் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
