வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அந்த நிகழ்வில் பேசுகையில் அவர், “நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளையும் சாதனைகளையும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக கருதி, அவற்றை நிலைநிறுத்த இரவும் பகலும் உழைக்க வேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது பெரிய காலமாக தோன்றினாலும், எனது பார்வையில் அது இன்னும் குறுகிய பயணமே. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் ஒரு தனிப்பட்ட தொடர்பு உள்ளது. என் முதல் திரைப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இங்கேயே படமாக்கப்பட்டது. அதில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சார் அணிந்திருந்த பூட்ஸால் அடிபட்ட அனுபவமும் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் தான் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் மறக்கமுடியாத நாட்களாக இருக்கும். தியானமும் மனநிலை உருவாக்கும் பயிற்சிகளும் நீங்கள் அடைய விரும்பும் உயரங்களை எட்ட உதவும். அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
அதனைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் பேசுகையில், எனது கனவு திட்டங்களில் ஒன்றாக தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘வட சென்னை 2’ திரைப்படத்தை குறிப்பிடலாம். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். ஆகவே, இனி ‘வட சென்னை 2’ குறித்த தகவலை தொடர்ந்து கேட்க வேண்டாம். அதேபோல், தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும்” என்று தெரிவித்தார்.
