பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வார் 2’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வந்தது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தார். இப்படம் தனது தொழில்வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என ஹிருத்திக் ரோஷன் எதிர்பார்த்திருந்தார். எனினும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் போனதால் அது அவருக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு முன்னதாக வெற்றி பெற்ற ‘கிரிஷ்’ திரைப்படத் தொடரை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்து ‘கிரிஷ் 4’ படத்தை தொடங்கத் தயாரானார். இந்த திட்டத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‘கிரிஷ் 4’ திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்தியில் அவர் இணைந்து பணியாற்ற விரும்பிய பல இயக்குநர்கள் தற்போது வேறு திட்டங்களில் பிஸியாக இருப்பதால், தென்னிந்திய இயக்குநர்களின் பக்கம் ஹிருத்திக் ரோஷன் கவனம் திருப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தெலுங்கு திரையுலகிலிருந்து இந்திக்கு வந்து வெற்றி கண்ட சந்தீப் ரெட்டி வங்கா போன்ற இயக்குநர்களின் சாதனைகள் அவரை ஈர்த்துள்ளன. அதனால், ஒரு தெலுங்கு அல்லது தமிழ் இயக்குநரின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், ஒரு பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த திட்டத்தை தயாரிக்க முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
