‘தாய் கிழவி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள காடுபட்டி கிராமத்தில் வசித்து வரும் பவுனுதாயி (ராதிகா) வட்டித் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அவர் வட்டி வசூலிக்க வருவதாக சொன்னாலே அந்த ஊரிலுள்ளவர்கள் அச்சத்தில் ஆழ்கிறார்கள். இப்படிப்பட்ட கடினமான மற்றும் அதிரடியான குணம் கொண்ட இவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்று விடுகிறார். மனஸ்தாபத்தால் தூரத்தில் வசித்து வந்த அவரது மூன்று மகன்களும் அவரை பார்க்க வருகிறார்கள். மருமகனும் உட்பட, குடும்பத்தினர் மட்டுமல்லாமல், ஊரிலுள்ள பலரும் அவர் உயிரிழந்தால் தான் தங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அந்நேரத்தில் நகை வியாபாரியான இளவரசு மூலம், பவுனுதாயி 160 பவுன் நகைகளை சேமித்து வைத்துள்ளார் என்ற தகவல் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. அந்த நகைகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், மகன்களும் மருமகள்களும் ராதிகாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் சொத்துகளை விற்று, கடன் வாங்கி செலவுகளை மேற்கொள்கிறார்கள். இறுதியில் ராதிகா உயிர் தப்பினாரா? அவர் சேமித்த நகைகள் அவர்களிடம் சென்றதா? என்பதே ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மையக் கதை. இப்படத்தை புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

மதுரை பின்னணியில் உருவான முழுக்க முழுக்க கிராமத்து சுவை நிறைந்த படம் இது. நகைச்சுவை கலந்து நகரும் வணிகத் திரைப்படமாகவும், குடும்ப உறவுகளின் வலியை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூர்வமான படமாகவும் இதை பார்க்கலாம். பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் அவர்களின் ஆற்றலை வலியுறுத்தும் படமாகவும் இதனை வகைப்படுத்தலாம். பல்வேறு பரிமாணங்களில் இப்படத்தை இயக்குநர் திறமையாக வடிவமைத்துள்ளார். கதையின் கரு, சுவாரஸ்யமான திரைக்கதை, சரியான நடிகர் தேர்வு மற்றும் அவர்களின் இயல்பான நடிப்பு ஆகியவை இணைந்து ‘தாய் கிழவி’யை தொடக்கம் முதல் முடிவு வரை ரசிக்க வைக்கின்றன.

தாய் கிழவியாக பவுனுதாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா, தொடக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை தனது அனுபவமிக்க நடிப்பால் கவர்ந்திழுக்கிறார். தெனாவெட்டான, தைரியமான, சுறுசுறுப்பான, நக்கலுடன் பேசும் பாட்டி கதாபாத்திரங்களை நம் ஊர்களில் கண்டிருக்கிறோம்; அதே இயல்பை ராதிகா மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து பெண்களுக்கு உரிய நடை, உடை, உடல்மொழி ஆகிய அனைத்திலும் அவர் இயல்பாக கலந்துவிட்டார். வழக்கமான தியாகம் செய்யும் பாசப்பாட்டி அல்லாமல், தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்ணாக அவரது கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குநரை பாராட்ட வேண்டும். தனது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து பல காட்சிகளில் அவர் தன்னம்பிக்கையுடன் நடித்துள்ளார். மேக்கப் மற்றும் தோற்றம் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. குறிப்பாக மதுரை பின்னணிக் காட்சிகளில் அவர் பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றுள்ளார்.

ராதிகாவைத் தவிர, அவரது மகளாக வரும் ரேச்சல், மகன்களாக நடித்துள்ள அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், மருமகள்களாக நடித்துள்ள மூவர் ஆகியோர் அனைவரும் நம் கிராமங்களில் காணும் மனிதர்களைப் போன்ற இயல்புடன் நடித்துள்ளனர். பென்னிகுயிக் கதாபாத்திரத்தில் வரும் முனிஸ்காந்தின் நகைச்சுவை மற்றும் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ராதிகாவின் மருமகனாக நடித்த முத்துக்குமார், பேரன், பேத்தி, மருத்துவர்கள், கிராம மக்கள், போலி பூசாரி உள்ளிட்ட பலரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவத்துடன் நடித்துள்ளனர். பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், படம் எங்கும் சோர்வு இல்லாமல் நகர்கிறது.

கிராமத்து பின்னணி, அந்த மண்ணின் மக்களின் குணாதிசயங்கள், கிண்டல் கலந்த வசனங்கள், நகைச்சுவை தருணங்கள், சண்டைகள், வாக்குவாதங்கள் ஆகிய அனைத்தையும் மதுரை மண்வாசனை கமழும் வகையில் படம் பதிவு செய்துள்ளது. ராதிகாவின் இரண்டாவது மகனாக வரும் சிங்கம்புலி தீவிர கமல் ரசிகராக இருப்பது சுவாரஸ்யமான அம்சம். அதனால் படத்தில் பல கமல் பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெறுகின்றன; அவை ரசிகர்களை ஈர்க்கின்றன. பாலசரவணன் இடம்பெறும் ஆம்புலன்ஸ் காட்சி மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. ராதிகாவின் பேரனாக வரும் சிறுவனின் வசனங்களும், சில செயல்பாடுகளும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

சிறிய காட்சிகளிலும் நகைச்சுவை மற்றும் நுணுக்கமான வசனங்கள் இயல்பாக பின்னியுள்ளன. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் தனது கேமரா மூலம் நம்மை நேரடியாக மதுரைக்குக் கொண்டு செல்கிறார். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா அமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு சிறப்பாக துணைநின்றுள்ளன. இடைக்கிடையே பயன்படுத்தப்பட்ட பழைய பாடல்கள் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.

இந்த திரைப்படத்தை ஒரு வயதான பெண்ணின் கதை என்று எளிதில் புறக்கணிக்க முடியாது. 160 பவுன் நகைக்காக ஏங்கும் மகன்களின் கதை என்று மட்டுப்படுத்தவும் முடியாது. கிராமத்து நகைச்சுவை படம் என்று சொல்லி தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில் பல காட்சிகளில் கிராமத்து மக்களின் இயல்பு மற்றும் குணநலன்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனை தொடர்பான காட்சிகளில் மருத்துவர்களின் மனிதநேய குணத்தை இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார். இறுதியில், ராதிகாவின் மகள் ரேச்சல் கதாபாத்திரம் மூலம் பெண்கள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். ஒரு தொழிலை கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் பணம் சம்பாதித்து சுயமாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். குறிப்பாக ராதிகா கதாபாத்திரம் இறுதியில் கூறும் அறிவுரைகள் பெண்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றன.

பெண்கள் பணம் சம்பாதிப்பதுடன், வாழ்க்கையை அனுபவிக்கவும், தங்களுக்கென நேரம் ஒதுக்கவும் வேண்டும் என்று படம் சொல்லுகிறது. யாரிடமும் சார்ந்திருக்காமல் புத்திசாலித்தனமாக சேமித்து வைப்பது எதிர்காலத்தில் உதவும் என்பதையும் ராதிகா தனது உரையில் வலியுறுத்துகிறார். இந்த கிளைமாக்ஸ் செய்தி ‘தாய் கிழவி’ திரைப்படத்தை நீண்ட காலம் மனதில் நிற்கச் செய்கிறது. அதேபோல் கொடுமை செய்யும் கணவனின் வன்முறையை தாங்கிக்கொண்டு பெண்கள் வாழ வேண்டிய அவசியமில்லை; தேவைப்பட்டால் மறுமணம் செய்யலாம் என்ற புரட்சிகரமான பெண்ணிய சிந்தனையும் படம் முன்வைக்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading