தமிழ் திரையுலகில் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல், தனித்திறமையின் மூலம் முன்னேறி சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர், தன் நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று அதன் மூலம் மேலும் பிரபலமான நடிகராக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து, விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ‘கோலிசோடா 3’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போர்த் ப்ளோர்’ திரைப்படத்தில் நடிகர் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும், பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் திருப்பங்களுடன், ஒரு சைக்கலாஜிகல் திரில்லராக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
